
பொரளை விபத்தில் கிரேன் வாகனத்தின் உரிமையாளர் கைது
பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய கிரேன் வாகனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய சந்தேகநபரான கிரேன் வாகன சாரதி மற்றும் அந்த வாகனத்தின் உரிமையாளரும் நாளை அளுத்கடை எண் 02 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய கிரேன் சாரதியை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியபோது அவர் கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை, பௌத்தலோக மாவத்தையிலிருந்து பொரளை நோக்கிச் சென்ற கிரேன் வாகனம் பொரளை கனத்த சுற்றுவட்டாரத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் 06 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 03 கார்களுடன் மோதியது.
போக்குவரத்து சமிக்ஞைகளுக்கமைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த போது , குறித்த கிரேன் வாகனம் வேகமாக முன்னோக்கிச் செல்வது சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
கிரேன் வாகனத்தின் அடியில் பல மோட்டார் சைக்கிள்கள் சிக்கியிருப்பதும் கமெராவில் பதிவாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், காயமடைந்த ஏழு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர்களில் இருவர் பெண்கள் எனவும் ஐவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் குற்றப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில், ஓட்டுநரின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிச்சென்றமை இந்த விபத்து ஏற்பட காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

