
பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெயை இனி விற்பனை செய்ய முடியாது
முறையாக பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே எதிர்காலத்தில் விற்பனை செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொதி செய்யப்படாத தேங்காய் எண்ணெய்யுடன் வேறு பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட மாதிரி சோதனைகள் மூலம் கலப்படம் செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 75 வர்த்தக நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
இவற்றில் 22 மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நுகர்வோருக்கு தரமான தேங்காய் எண்ணெயை வழங்குவதற்காக, தெங்கு அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை ஆகியவை பொதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
இதன்படி, எதிர்காலத்தில், பொதிசெய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தவிர வேறு எந்த வடிவத்திலும் தேங்காய் எண்ணெயை விற்பனை செய்வது தடைசெய்யப்படும் என்றும், இவ்வாறு தேங்காய் எண்ணெயை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டம் அமல்படுத்தப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

