அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பலவீனங்கள் குறித்து கோப் குழுவின் கவனத்துக்கு

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பலவீனங்கள் குறித்து கோப் குழுவின் கவனத்துக்கு

அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (23) கூடியது.

ஊழியர் சேம நிதிய சட்டம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய (ETF) சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் செயற்படாமை காரணமாக 2006 முதல் 2022 வரையான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட நிதியங்களுக்கு மிகைக்கட்டணமாக 122 மில்லியன் ரூபாய் செலுத்தவேண்டியுள்ளதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இதன்போது புலப்பட்டது.

அத்துடன், கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களால் செலுத்தவேண்டிய பங்களிப்புத் தொகை அண்ணளவாக 126 மில்லியன் ரூபாய் தொகையை கூட்டுத்தாபனத்தினால் செலுத்தவேண்டி ஏற்பட்டதால் 248 மில்லியன் ரூபாய் கூட்டுத்தாபனத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

May be an image of 4 people, people studying and text

2006 ஆம் ஆண்டு முதல் பணியாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கும்போது, அதற்கு EPF மற்றும் ETF செலுத்தப்பட வேண்டுமா என்று தொழில் ஆணையர் நாயகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வினவப்பட்டிருந்த நிலையில், அதற்கான பதில்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

2018 இல் பணியாளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பின்படி இது செலுத்தப்பட வேண்டி ஏற்பட்டதாகவும் இதன்போது தெரியவந்தது.

இந்த விடயத்தை விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டதாகவும், ஆனால் பொறுப்பான அதிகாரி அல்லது தரப்பினர் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்த விடயங்களில் தெளிவின்மை இருப்பதாகத் தோன்றுவதால், இது குறித்த முழுமையான அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவித்தது.

May be an image of 14 people and text

தளபாடங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்துக்கு ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான நட்டம் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் தொகைகள், 2021 இல் 20 மில்லியன் ரூபாய், 2022 இல் 95.6 மில்லியன் ரூபாய், 2023 இல் 72.1 மில்லியன் ரூபாய் மற்றும் 2024 இல் 75.6 மில்லியன் ரூபாய் எனப் பதிவாகியுள்ளதாகத் தெரியவந்தது.

பொருளாதார நெருக்கடி போன்ற கரணங்கள் இந்த நட்டத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வருடாந்த விற்பனைத் தேவைகளின் அடிப்படையில் உற்பத்தித் தேவைகளைக் கணித்தல் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான புதிய உத்திகளைக் கடைப்பிடித்தல் போன்ற முறைகள் மூலம் நட்டங்களைக் குறைத்து, கூட்டுத்தாபனத்தை இலாபகரமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

மிகவும் நம்பகமான மற்றும் சிறந்த தரமான மர மற்றும் மர அடிப்படையிலான தயாரிப்புகளை வழங்குவதில் நாட்டின் தலைவராக இருக்க வேண்டும் என நிறுவனத்தின் தொலைநோக்காக இருந்தாலும், அந்த இலக்குகளை அடைவதற்கான தடைகள் குறித்து குழு விரிவாகக் கலந்துரையாடியது.

மரம் மற்றும் மர அடிப்படையிலான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வது கூட்டுத்தாபனத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பிலும் குழு கவனம் செலுத்தியது.

பைனஸ் மரங்களை ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பைனஸ் மர வகைக்கான தொழில்துறை கேள்வி குறைவு என்பதாலும், நாட்டில் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதாலும் இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இறக்குமதியின் போது மரக் கூட்டுத்தாபனத்தினால் பரிசீலனை செய்து சான்றிதழ் வழங்கக்கூடிய நிலைக்கு சட்டரீதியான மாற்றங்களைச் செய்யுமாறு அமைச்சின் செயலாளரின் கவனத்துக்குக் குழு கொண்டுவந்தது.

முகாமைத்துவது உதவியாளர் பதவிகளின் இரண்டாம் நிலை மட்டத்தில் 11 பேர் அமைய அடைப்படையிலும் 49 பேர் தினசரிப் பணியாளர்களாகவும் 60 ஊழியர்களை பணிக்கு அமர்த்தியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

May be an image of 2 people, people studying, crowd and text

அத்துடன், அங்கீகரிக்கப்படாத பதவிகளில் 9 பேர் நிரந்தர சேவையிலிருந்து சம்பளம் பெருகின்றமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பாக தகவல்களைக் கோரும் போது தெளிவான தகவல்களை வழங்கத் தவறியது குறித்து குழு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், இது தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு குழு அறிவுறுத்தியது.

நிறுவனத்தின் கையிருப்பு முகாமைத்துவ கணினி அமைப்பின் முறையான பராமரிப்பு இல்லாமை தொடர்பிலும் குழு விசாரித்தது. 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பில் முறையான பணியாளர்கள் இல்லை என்பதும், புதுப்பிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.

அதனை முறையாகக் கட்டியெழுப்புவதற்கு மற்றும் சம்பந்தப்பட்ட தரவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு அறிவித்தது.

நிறுவனத்தின் நிதிப் பிரிவில் உள்ள வாகனப் பதிவேட்டின்படி, கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களின் எண்ணிக்கை 547 ஆக இருந்தாலும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் நிறுவனத்தின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 563 என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நிதி அமைச்சின் அனுமதியுடன் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மோட்டார் சைக்கிள்களின் உரிமை பணியாளர்களுக்கு முறையாக மாற்றப்படாததால் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதற்கமைய, இந்த விடயத்தை விசாரித்து முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டது.

கூட்டுத்தாபனத்தின் பயன்படுத்தக்கூடிய மரம் வெட்டும் இயந்திரங்கள் (Chainsaw) இருந்தபோதிலும், மரங்களை வெட்டும் போது தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் சேவை பெறுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

May be an image of 8 people, people studying and text

மரம் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதால் விசேட அனுமதியின் கீழ் 2023 இல் 100 மரம் வெட்டும் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியாட்கள் பயன்படுத்தும் போது கைப்பற்றப்பட்டு நீதிமன்ற செயன்முறையை அடுத்து அரசுடைமையாக்கப்பட்ட மரம் வெட்டும் இயந்திரங்களையும் பயன்படுத்தி வினைத்திறனான திட்டத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சமன்மலீ குணசிங்ஹ, லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, சுனில் ராஜபக்ஷ, பத்மநாதன் சத்தியலிங்கம், திலிண சமரகோன், சந்திம ஹெட்டிஆரச்சி மற்றும் தினேஷ் ஹேமந்த ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அத்துடன், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ரோஹித உடுவெல அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நிஷாந்த பட்டபெந்தி உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )