
சிறையில் இருக்கும் பிள்ளையான், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு கடிதம் எழுதியது எப்படி ? மாநகரசபை முதல்வரிடம் CID சிஐடி விசாரணை
மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருக்கும் பிள்ளையான் எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது .
இந்த கடிதம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதனிடம், நேற்று முன்தினம் 7ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பில் புணர் நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தை திறந்து வைத்து, மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு வலியுறுத்தி, சிறையில் உள்ள பிள்ளையான் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.
பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்குற்றப் புலனாய்வு திணைக்கள காவலில் இருக்கும் போது கடிதம் ஒன்று வெளிவந்ததுடன் அது முகநூலில் பிரசுரிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்கு சென்று மாநகரசபை முதல்வரிடம் இந்த கடிதம் தொடர்பான விசாரணை ஒன்றை மேற்கொண்டனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் ,சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக ,கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் , ”கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்கலப்பு மாநகர முதல்வருக்கு ” கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டு.மாநகர முதல்வருக்கு ” என தலைப்பிடப்பட்டு , மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் புதிதாக அமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பாக ,பிள்ளையானின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் ஒன்றை ,கடந்த 30 ஆம் திகதி ,பிள்ளையானின் கட்சி உறுப்பினர் ஒருவர் மாநகரசபை முதல்வரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

