
‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் இந்தியாவின் 79-வது சுதந்திரதின விழா நிகழ்வுகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது
‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் ,இன்று இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவின் நிகழ்வுகள் டெல்லி செங்கோட்டையில் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகியது .இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் தலைமையில் ,பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உற்பட பல முக்கியஸ்தர்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
”இந்த நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் பெருமைப்படக் கூடிய ஒரு திருவிழா இன்று எனவும் பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை கொண்டாடும் நாள் இதுவென”வும் சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றிய போது ,
”பல சவால்களை எதிர்கொண்டு, 1947ல் நமது நாடு சுதந்திரம் பெற்றது. இது பெருமை மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட கூட்டு சாதனைகளின் தருணம்.
தேசம் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 140 கோடி இந்தியர்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.
இந்திய அரசியலமைப்பிற்காக தியாகம் செய்த நாட்டின் முதல் சிறந்த மனிதர் டாக்டர் ஷ்யாமாவின் 125வது பிறந்தநாள் இன்றாகும்.
ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு என்ற மந்திரத்தை உயிர்ப்பித்த டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு இதயபூர்வ அஞ்சலி செலுத்துகிறோம் ‘‘ எனவும் நரேந்திர மோடி உரையாற்றினார் .
இந்தியா ஒகஸ்ட் 15ஆம் திகதி , 1947 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது.
இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நீண்ட வரலாறு கொண்டது.
1600 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் வர்த்தக நோக்கமாக இந்தையாவிற்குள் நுழைந்த பிரித்தானியர் படிப்படியாக , இந்தியாவை தமது ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர்.
இதற்கு எதிராக 1857-ஆம் ஆண்டில் சிப்பாய்க் கலகம் தொடங்கி படிப்படியாக சுதந்திர போராட்டங்கள் தொடர்ந்தன .பலர் உயிர்த்தியாகம் செய்தனர்.
பலர் நாடுகடத்தப்பட்டனர்.
பிரித்தானியருக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டங்கள் நடைபெற்ற அதேவேளை
மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களில் லட்சக்கணக்கான இந்தியர்கள் இணைத்தனர்.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற பல தலைவர்கள் வெவ்வேறு வழிகளில் சுதந்திரப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம் , உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற பல இயக்கங்கள் சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்தின.
இறுதியாக, ஆகஸ்ட் 15, 1947 அன்று, இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

