
காசா நகரைக் முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியது பேரழிவை தடுக்க உடனடி போர்நிறுத்தத்தை ஏற்படுத்த ஐ. நா கோரிக்கை
சர்வதேச அளவில் எழுப்பப்பட்ட விமர்சனங்களை மீறி ,காசா நகரத்தை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடங்கிய இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ,ஹமாஸ் அமைப்பினரின் கோட்டை என கூறப்படும் காசா நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது .
மேலும் மொத்தம் சுமார் 60,000 வீரர்கள் வரவழைக்கப்பட உள்ளதாக இஸ்ரேல் முன்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஒரு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் வசிக்கும் நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேலிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் திட்டமிட்ட தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால் காசா நகரத்தின் சில பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறிவருவதாக வெளிநாட்டு செயதிகள் தெரிவிக்கின்றன .
காசா நகரத்தின் ஜெய்டவுன் மற்றும் சப்ரா சுற்றுப்புறங்களில் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் நகரத்தின் வடமேற்குப் பகுதியை நோக்கிச் சென்றுள்ளனர்.
இதேவேளை இந்தத் தாக்குதலில் ஏற்படக்கூடிய உயிரிழப்புகள் மற்றும் அழிவைத் தடுக்க உடனடியாக போர்நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் காசா நகரத்தில் உள்ள லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி தெற்கு காசாவுக்குச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மேற்குக் கரையில் சுமார் 2.7 மில்லியன் பாலஸ்தீனியர்கள் உள்ளதாகவும் சுமார் 700,000 மக்கள் ஏற்கனவே அங்கு நிறுவப்பட்ட யூதக் குடியிருப்புகளில் வசித்து வருவதாக வெளிநாட்டு செயதிகள் கூறுகின்றன .

