
சட்டத்திற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு இன்று வெளியேறுவதாக தகவல்
” ஜனாதிபதி உரிமைகளை நீக்குதல்” விதிகளின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டியேற்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் ஏற்கனவே உத்தியோகபூர்வ இல்லங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் சலுகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது..
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் ஹம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரும் தங்கள் உத்தியோகபூர்வ இல்லங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
சம்பந்தப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்கள் ஒப்படைக்கப்படாவிட்டால், எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை , எதிர்காலத்தில் “ஜனாதிபதி உரிமைகளை நீக்குதல்” சட்டத்தின் விதிகளின்படி செயல்பட எதிர்பார்ப்பதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டத்தை ஆராய்ந்து இது தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி உரிமைகள் குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது.
பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கையெழுத்திட்டு சட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சட்டம் அமுலுக்கு வரும் நாளிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி அல்லது முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு வழங்கப்பட்ட எந்தவொரு வீடும், செலுத்தப்படும் எந்தவொரு மாதாந்த கொடுப்பனவும், மாதாந்த செயலாளர் கொடுப்பனவும், உத்தியோகபூர்வ போக்குவரத்து மற்றும் பிற அனைத்து வசதிகளும், இரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

