
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அங்கீகாரம்
2025.09.23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாவது மதிப்பீடுக்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் சட்டமூலம் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
குறித்த மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நஜீத் இத்திக தலைமையில் அண்மையில் (11) பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.
தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகம் 1984ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தாலும், அந்த நிறுவனம் இதுவரையில் பாராளுமன்ற சட்டத்தின் ஊடாக ஸ்தாபிக்கப்படவில்லையென்பதால், நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள், பொறுப்புக்கள் மற்றும் சேவைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்குத் தேவையான சட்டபூர்வ அந்தஸ்தை வழங்குவது இந்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும்.
மண்சரிவு தொடர்பில் தமது நிறுவகம் வழங்கும் அறிவுறுத்தல்களை உள்ளூராட்சி மன்றங்கள் சரியான முறையில் பின்பற்றாத சந்தர்ப்பத்தில், குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அவை தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளைத் தம்மால் எடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
இதேவேளை, தேசிய கட்டிட ஆராச்சி நிறுவகத்தின் 2023 மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் 2024 மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயலாற்று அறிக்கை என்பனவும் குழுவில் ஆராயப்பட்டன.
வனவிலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்து செயலாற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை தொடர்பில் குழு வினவியது. இது தொடர்பான முழுமையான தகவல்களை மாவட்ட ரீதியாக சேகரித்து அமைச்சில் உள்ள தகவல்களுடன் சரிபார்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர்.
இது பற்றிய கலந்துரையாடல்களைடயடுத்து இந்த அறிக்கைகளுக்கு குழு அனுமதி வழங்கியது.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு பிரதியமைச்சர் அநுர ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், முஜிபுர் ரஹுமான், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, எம்.கே. எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார, தர்மப்ரிய விஜேசிங்ஹ ஆகியோர் கலந்துகொண்டனர்.

