
கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட ஒருங்கிணைந்த நீர் விநியோக கட்டமைப்பு மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு
கம்பஹா அத்தனகல்லை மற்றும் மினுவாங்கொடை பகுதிகளுக்கான நீர் விநியோக கட்டமைப்பு நேற்று (18) வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் , நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் சீன தூதுவர் கி ஷன்ஹொங் தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்திற்காக மக்கள் சீன குடியரசின் சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி உதவியுடன் 229.5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டது.
இதன் பிரதான நிருமாண ஒப்பந்ததாரராக சீன இயந்திரங்கள் பொறியியலாளர் கம்பெனி செயற்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் கம்பஹா, அத்தனகல்லை, மினுவாங்கொடை, மீரிகம மற்றும் மகர பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 443 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக இந்த நீர் விநியோகத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி ஐந்து நீர் கோபுரங்கள் ஊடாக 88,000 புதிய நீர் இணைப்புகளை பயனாளிகளுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும்.
இந்த நீர் கோபுரங்கள் பெலும்மகர, நய்வல, மினுவாங்கொடை, பஸ்யால மற்றும் வென்பொக்குனுகம போன்ற பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 1500 கன மீட்டர் கொள்ளளவுடன் இதனால் 504 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மற்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பஸ்னா கொட நீர்த்தேக்கத்தை திறந்து வைத்ததுடன், கரஸ்னாகல மீன் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளையும் அதிதிகள் ஆரம்பித்து வைத்ததுடன், நீர் கட்டமைப்பு முறையை மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
இங்கு கருத்தைத் தெரிவித்த வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ” இடை நடுவில் நிறுத்தப்பட்ட பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டத்தை சீன அரசாங்கத்தின் கடன் உதவி மற்றும் திறைசேரியின் நிதி உதவியின் கீழ் மீண்டும் ஆரம்பித்து மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு முடிந்தது என்றும் அதற்காக இந்த நாட்டு மக்கள் செலுத்தும் வரி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும்” சுட்டிக்காட்டினார்.
“இலங்கை மற்றும் சீனா மிகவும் வலுவான நட்புடைய இரண்டு நாடுகளாகும். இராஜதந்திர தொடர்புகள் மிகவும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல்வ திட்டங்களை சீனக் கடன் உதவியின் கீழ் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் சீனாவும் அன்பளிப்புக்களை வழங்கவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்காக நாட்டின் சகல பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் சீன அரசாங்கத்தின் சீருடை வழங்கப்பட்டது. அவ்வாறே 2026 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்” அமைச்சர் குறிப்பிட்டார்.

