
வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழு கவனம்
வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட அவசர கொள்முதல் மற்றும் வருடாந்த எதிர்காலத் திட்டம் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இதில் குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெற்ற கேள்விப் பத்திரம் கோரல் நடைமுறை மற்றும் 2022ஆம் ஆண்டின் பின்னர் குறித்த கேள்விப்பத்திர நடைமுறையில் ஒவ்வொரு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து குழு கவனம் செலுத்தியது.
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் அண்மையில் (17) கூடியபோதே இவ்விடயம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் வலுசக்தி அமைச்சு, வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனம், இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபை மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு 2022 ஆம் ஆண்டுக்கு முன்பு அவசர கொள்முதல்கள் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியதுடன், அவசர கொள்முதல்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் கொண்ட முழுமையான அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், வரையறுக்கப்பட்ட லங்கா நிலக்கரி (தனியார்) நிறுவனத்திடம் தற்பொழுது காணப்படும் இருப்புக்கள் போதுமான நாட்கள் மற்றும் அதன் பின்னர் எதிர்காலத்தில் கொள்முதல் செய்யவிருக்கும் நிலக்கரியின் அளவு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, ஜகத் விதான மற்றும் அசித நிரோஷன எகொட விதான ஆகியோர் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

