
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்
அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை சலுகை வட்டி விகிதத்தில் வழங்க வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
33.5 சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கு வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை வழங்குதல்
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஆதனக் கடன் திட்டத்தினை ரூபா 50 இலட்சம் வரை வழங்குவதற்கான புதியதொரு கட்டமைப்பின் கீழ் நடைமுறைபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விடயத்தில், ஆரம்ப ரூபா 30 இலட்சம் வரை 4 சதவீத வட்டிச் சலுகையிலும், ரூபா 30 இலட்சத்திலிருந்து ரூபா 50 இலட்சம் வரை 2 சதவீத வட்டிச் சலுகையிலும் கடன்களை வழங்குவதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகிறோம்.
33.6 அக்ரஹார திட்டத்தின் கீழ் சுகாதார நலக் காப்பீட்டெல்லை விரிவாக்கல்
அரச ஊழியர்களுக்கான தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் அரச ஊழியர்கள் சில சலுகைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும், குறைந்தபட்ச ஊழியர் பங்களிப்புத் தொகையாக ரூபா 125 இருப்பதன் காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்கள் நிலையான அளவில் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ரூபா 125 பங்களிப்புத் தொகையை மேலும் 75 ரூபாவினாலும், மாதாந்த பங்களிப்புத் தொகையான ரூபா 300 மற்றும் ரூபா 600 ஆகியவற்றை மேலும் 150 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

