
வெளிநாட்டு சுற்றுலாப் பெண்ணுக்குப் பாலியல் தொந்தரவு ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொகவந்தலாவையைச் சேர்ந்த நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) உத்தரவிட்டார்.
திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் ஒரு குழந்தையின் தந்தை ஆவார்.
24 வயதுடைய நியூசிலாந்து பிரஜை ஒருவர் நேற்று முன்தினம் (15) பிற்பகல் சுற்றுலாப் பொலிஸாருக்கு மின்னஞ்சல் மூலம் முறைப்பாடு செய்ததை அடுத்து, திருக்கோவில் மற்றும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணைகளின் போது, கடந்த செப்டெம்பரில் இலங்கைக்கு வந்த அந்த யுவதி, அக்டோபர் 25 ஆம் திகதி அறுகம்பையிலிருந்து பாசிக்குடாவிற்கு முச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது திருக்கோவில் பகுதியில் சந்தேகநபரைச் சந்தித்தது தெரியவந்துள்ளது. அச்சமயத்திலேயே சந்தேகநபர் அநாகரிகச் செயலில் ஈடுபட்டதாக விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

