
நாமல் ராஜபக்ஷ லண்டனில் பெற்றுக்கொண்ட சட்டத்துறை பட்டம்தொடர்பில் சர்ச்சை -அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து
சிட்டி யுனிவர்சிட்டி ஒவ் லண்டன் நிறுவனத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டதாக கூறப்பட்டு, சமர்ப்பித்த சட்டக் கல்விக்கான பட்ட சான்றிதழ் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சிட்டி யுனிவர்சிட்டி ஒவ் லண்டன் நிறுவனத்தினால் இந்த சான்றிதழ் 2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நாமலுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதியன்று சுய விருப்பில் பதவி விலகியுள்ளார்.
எனவே நாமலின் பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
”பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்ட சட்டக் கல்விக்கான பட்டம் மற்றும் அதன் சான்றிதழ் பற்றி சமூக ஊடகங்களில் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் புலனாய்வு ஊடகவியலாளரான நிர்மலா கண்ணங்கர இந்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
நாமல் ராஜபக்ஷ சிடி யுனிவர்சிடி ஒப் லண்டன் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக குறிப்பிடப்படும் சட்ட பட்டப்படிப்பு சான்றிதழை, முன்வைத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ சிட்டி யுனிவர்சிடி ஒப் லண்டனில் பெற்றுக்கொண்டதாக சமர்ப்பித்த சான்றிதழ் 2009.09.15 ஆம் திகதி அவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த சான்றிதழில் கைச்சாத்திட்டுள்ள உப வேந்தர் 2009.07.23 ஆம் திகதியன்று சுய விருப்பில் பதவி விலகியுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் சட்டக்கல்லூரியில் பயில்வதாயின் அவர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும்.
அவ்வாறில்லாவிடின் சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியை பெற்றிருக்க வேண்டும்.
சிட்டி யுனிவர்சிட்டி ஒப் லண்டன் நிறுவனம் 2009.10.15 ஆம் திகதி தான் இலங்கை சட்டக்கல்லூரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷ எம்.பி. சட்டக்கல்வியை தொடர்வதற்கு 2009.09.25ஆம் திகதி விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பித்த திகதியன்றே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே இவரது சட்ட பட்டம் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. எனவே பாராளுமன்றத்தின் கெளரவத்தை கருத்திற் கொண்டு நாமல் ராஜபக்ஷ இதன் உண்மைதன்மையை வெளிப்படுத்த வேண்டும்’’ என
2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.

