
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகல – ஹல்துமுல்லபகுதி ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது பல நீர்த்தேக்கங்கள் வான் கதவுகள் திறப்பு
பதுளை – கொழும்பு பிரதான வீதியின் பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப்பகுதி ஒரு வழி பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இரவு அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதாக போலிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த பகுதி இன்னும் மண்சரிவு அபாயத்தில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று (25) காலை வீதி மேம்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதேவேளை , தற்போது மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள கீழ் கடுகண்ணாவ வீதி ,மழை இல்லாத போது மட்டும் ஒரு வழிப் பாதையாக திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீதியை போக்குவரத்திற்காக திறப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று குறித்த நிறுவனத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கே.எம். பண்டார, தெரிவித்தார்.
இதேவேளை நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை இன்னும் செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக களு, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தலகஹகொட மற்றும் பனதுகம பகுதிகளில் நில்வலா ஆறு நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் தலா 4 அடி திறந்து, வினாடிக்கு 16,200 கன அடி நீரை வெளியேற்றுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டைச் சுற்றியுள்ள கீழ் வளிமண்டலத்தில் நிலவும் கொந்தளிப்பு காரணமாக, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று முதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வாளர் கசுன் பாஸ்குவேல் தெரிவித்தார்.

