
இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
நட்புறவுச் சங்கத்தை மீளஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (27) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
தென்னாப்பிரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர், ஸன்டெல் எட்வின் ஷால்க் (H.E. Sandile Edwin Schalk) அவர்கள் கௌரவ அதிதியாக இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நட்புறவுச் சங்கத்தின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
1994 இல் முறையான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் நிறுவப்பட்ட இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையேயுள்ள நீண்டகால உறவை இரு தரப்பினரும் இங்கு வலியுறுத்தினர்.
பல்தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர ஆதரவை இரு தரப்பினரும் பாராட்டினர்.
சுற்றுலா, கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆழமான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கச் செயன்முறைகளில் தென்னாப்பிரிக்காவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்திற்கு முன்னர், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சபாநாயகரை மரியாதையின் நிமித்தம் சந்தித்தார்.
இதன் போது, தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளை அவர் பாராட்டியதுடன், தென்னாப்பிரிக்காவின் ஆதரவை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

