
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை
அனர்த்தத்திற்கு உள்ளான பகுதிகளுக்கு தேவையற்ற முறையில் செல்வதைத் தவிர்க்குமாறு, அது பொதுமக்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வெள்ளநீர் அதிக வேகத்துடன் பாய்வதால், நீரில் குளிப்பது அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகுந்த அபாயகரமானது என்றும், அவ்வாறான செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், எவ்வித சிக்கல்களும் இருந்தால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதிக மழையால் மண் நீரால் செறிவடைந்துள்ள சூழலில், நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள நிவாரணக் குழுக்கள் முன்னெடுத்து வரும் பணிகளைப் பாராட்டிய அவர், அவர்களுக்கான நன்றியையும் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், நிவாரண விநியோக நடவடிக்கைகள் மாவட்டச் செயலாளர் மூலம் உரிய நடைமுறைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

