க்ரீன் கார்ட் விசா திட்டத்தை உடனடியாக இடைநிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்

க்ரீன் கார்ட் விசா திட்டத்தை உடனடியாக இடைநிறுத்திய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் ‘க்ரீன் கார்ட்’ விசா திட்டத்தை உடனடியாக இடைநிறுத்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.டி.யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபர், 2017 ஆம் ஆண்டு விசா குலுக்கல் முறையின் ஊடாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

48 வயதுடைய போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த குறித்த நபர், க்ரீன் கார்டு பெற்று சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம், க்ரீன் கார்ட் குலுக்கல் திட்டத்தை உடனடியாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

இத்தகைய ஆபத்தான நபர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படக்கூடாது என அவர் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 50,000 பேருக்கு குலுக்கல் முறையில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான க்ரீன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2025 ஆம் ஆண்டுக்கான திட்டத்திற்காக சுமார் 2 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போதைய இடைநிறுத்தம் காரணமாக அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் நீண்டகாலமாகவே இந்த விசா குலுக்கல் முறையை விமர்சித்து வருவதுடன், இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தகுதி அடிப்படையிலான விசா முறைமே சிறந்தது என்றும் வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே, குறித்த சந்தேகநபர் கிளாடியோ, நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பிரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், எம்.ஐ.டி.யில் ஒரு பேராசிரியரும் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் தடை தற்காலிகமா அல்லது நிரந்தரமா என்பது குறித்து மேலதிக சட்ட ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )