
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் 22 இலட்சத்து 19 ஆயிரத்து 209 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலைமைக்கிடையிலும், சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக இலங்கையைத் தேர்வு செய்து வருவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இதுவரை 5 இலட்சத்து 1 ஆயிரத்து 97 இந்திய சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். அதேபோல், ரஷ்யாவிலிருந்து 1 இலட்சத்து 71 ஆயிரத்து 99 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2 இலட்சத்து 939 பேரும், ஜெர்மனியிலிருந்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 355 பேரும், சீனாவிலிருந்து 1 இலட்சத்து 27 ஆயிரத்து 553 பேரும், பிரான்ஸிலிருந்து 1 இலட்சத்து 4 ஆயிரத்து 802 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1 இலட்சத்து 1 ஆயிரத்து 12 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிசம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் மட்டும் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

