
எலான் மஸ்கின் புதிய சாதனை
உலகின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா, ஸ்டார்லிங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டி 749 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
சமீபத்தில் டெஸ்லா நிறுவனத்தைச் சுற்றிய வழக்கில் எலான் மஸ்க்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, அவரது சொத்து மதிப்பில் கணிசமான உயர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம், குறுகிய காலப்பகுதியில் அவரது நிகர சொத்து மதிப்பு பெரிதும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
பின்னர் இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அவரது நிகர சொத்து மதிப்பு 600 பில்லியன் டாலர்களை எட்டிய நிலையில், ஒரே வாரத்தில் அது 749 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, சுமார் 800 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல்களும், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாக பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
600 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை ஏற்கனவே பதிவு செய்திருந்த எலான் மஸ்க், தற்போது 700 பில்லியன் டாலரைத் தாண்டி புதிய உலகச் சாதனையையும் படைத்துள்ளார்.

