
பண்டிகை காலத்தில் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு திட்டம் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் பொலிஸார்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பல்வேறு தேவைகளுக்காக முக்கிய நகரங்களுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்வதற்கும் முறையான பாதுகாப்புத் திட்டம் மற்றும் போக்குவரத்துத் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
கிறிஸ்துமஸை பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள ஒவ்வொரு கத்தோலிக்க தேவாலயத்திலும் விசேட பூஜைகள் நிகழ்வுகள் நடைபெறுவதால், அனைத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மதத் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள் மற்றும் கடைகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நகரப் பகுதிகளில் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தகவல்களைச் சேகரித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள், தனிநபர் குழுக்கள், வாகனங்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்கவும், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்தால் அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிக்கு தெரிவிக்கவும் பொலிஸ்துறை கேட்டுக்கொள்கிறது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக மேற்கொள்ளப்படும் இந்தக் கடமைகளின் போது பொதுமக்களின் ஒத்துழைப்பை இலங்கை பொலிஸ் துறை தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

