இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து ; 16 பேர் பலி

இந்தோனேசியாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து ; 16 பேர் பலி

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள மனாடோ நகரில் இயங்கி வந்த முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

‘வெர்தா தாமய்’ எனப்படும் குறித்த முதியோர் இல்லத்தில் நேற்றுமுன்தினம் (28) இரவு திடீரென தீப்பற்றியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்ட நேரத்தில் பெரும்பாலான முதியவர்கள் தங்களது அறைகளில் உறங்கிக் கொண்டிருந்ததால், தீ பரவியதை உடனடியாக உணர முடியாமல் பலர் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

முதியோர் இல்லத்தில் இருந்த சுமார் 30 பேரில் 12 முதல் 15 பேர் வரை பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 16 முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட ஏனையவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மின் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் 9ஆம் திகதி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்டாவில் உள்ள அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது நிகழ்ந்த இந்த முதியோர் இல்ல விபத்து நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )