
ஆப்கானிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ; 17 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெராத், கந்தஹார், ஹெல்மண்ட் உள்ளிட்ட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல பகுதிகளில் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஹெராத் மாகாணத்தின் கப்கான் மாவட்டத்தில் ஒரு வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், வெள்ளத்தில் சிக்கி மற்றும் மின்சாரம் தாக்கியதில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்களில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 1,200-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் மத்திய, வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் முழுவதும் இந்த கனமழை மற்றும் வெள்ள அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுப் ஹம்மாத் தெரிவித்துள்ளார்.

