பஸ் ஓட்டுநரிலிருந்து ஜனாதிபதி வரை – நிக்கோலஸ் மதுரோவின் அரசியல் பயணம்

பஸ் ஓட்டுநரிலிருந்து ஜனாதிபதி வரை – நிக்கோலஸ் மதுரோவின் அரசியல் பயணம்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ 1962 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி கராகஸ் நகரில் பிறந்தார்.

தனது வாழ்க்கையை கராகஸ் மெட்ரோ அமைப்பில் பஸ் ஓட்டுநராக ஆரம்பித்த அவர், அதே காலகட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் தொழிற்சங்கத் தலைவராக உருவெடுத்தார். இதுவே அவரது அரசியல் நுழைவுக்கான அடித்தளமாக அமைந்தது.

1990-களில், வெனிசுலாவின் புரட்சித் தலைவர் ஹியூகோ சாவேஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், அவருக்கு ஆதரவாக மதுரோ செயற்பட்டார்.

இதன் பின்னர், சாவேஸின் மிக நம்பிக்கைக்குரிய அரசியல் துணையாக அவர் உருவெடுத்தார்.

2006 முதல் 2013 வரை வெனிசுலாவின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், அதன் பின்னர் துணை அதிபராகவும் மதுரோ பணியாற்றினார்.

2013 ஆம் ஆண்டு ஹியூகோ சாவேஸ் காலமானதைத் தொடர்ந்து, அவரது ஆசீர்வாதத்துடன் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மதுரோ வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தார். சாவேஸின் சோசலிச கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் அப்போது உறுதியளித்தார்.

மதுரோவின் ஆட்சிக்காலத்தில் வெனிசுலா கடும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் தவறான பொருளாதார மேலாண்மை காரணமாக, நாட்டில் அதிகபட்ச பணவீக்கம் (Hyperinflation) ஏற்பட்டது.

அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததுடன், ஒரு ரொட்டியை வாங்குவதற்கே மூட்டை மூட்டையாகப் பணம் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உருவானது. பட்டினி, வேலைவாய்ப்பு இழப்பு போன்ற காரணங்களால் பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மதுரோ முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் யுவான் குவைடோ தன்னை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்தார். அப்போது, அமெரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் மதுரோவின் ஆட்சியை அங்கீகரிக்க மறுத்தன.

2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இதையும் எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பெரும் தேர்தல் மோசடி எனக் குறிப்பிட்டு போராட்டங்களை முன்னெடுத்தன.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை தனது போதைப்பொருள் வெகுமதி திட்டத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டு மதுரோவை கைது செய்ய அல்லது தண்டிக்க தேவையான தகவல்களை வழங்குவோருக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படும் என அறிவித்தது.

பின்னர், 2025–2026 தொடக்க காலப்பகுதியில் இந்த வெகுமதி தொகை 50 மில்லியன் டொலராக உயர்த்தப்பட்டதாகவும், இது ஒசாமா பின் லாடனுக்கு அறிவிக்கப்பட்ட தொகைக்கு இணையானது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, மதுரோ மீது போதைப்பொருள் கடத்தல், நார்கோ-டெரரிசம், மற்றும் “கார்டெல் டி லாஸ் சோலஸ்” எனப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயல்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. மேலும், கொலம்பியாவின் FARC அமைப்புடன் இணைந்து, கோகயினை ஆயுதமாக பயன்படுத்தி அமெரிக்காவை நிலைகுலையச் செய்ய முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நீதித்துறை தகவலின்படி, வெனிசுலாவிலிருந்து ஆண்டுதோறும் 200 முதல் 250 டன் வரை கோகயின் சர்வதேச சந்தைக்கு கடத்த மதுரோ உதவியதாக கூறப்படுகிறது. இதற்கு மேலாக, அரசியல் எதிரிகள், மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை, சட்டவிரோத கைது மற்றும் சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2024 தேர்தல் முறைகேடுகளின் பின்னர், சர்வதேச சமூகத்தின் பார்வையில் மதுரோ ஒரு “சட்டவிரோத ஆட்சியாளர்” என்ற முத்திரையை மேலும் உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், “மதுரோ இனி ஒரு அரச தலைவர் அல்ல; அவர் தேடப்படும் குற்றவாளி” என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. பல நாடுகள் அவருடனான தூதரக உறவுகளை துண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், 2026 ஜனவரி 3 ஆம் திகதி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்க சிறப்புப் படைகளால் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )