
650 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம்
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாக்கத்தால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவிலான பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம் என எச்சரித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், உருவாகியுள்ள இந்த தாழ்வு மண்டலம் நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதுடன், மணிக்கு சுமார் 9 கிலோமீற்றர் வேகத்தில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் தாக்கமாக மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறினார்.
1970ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகியுள்ள 21ஆவது தாழ்வு மண்டலமாக இது அமைகின்ற போதிலும், முன்னர் ஏற்பட்ட தாழ்வு மண்டலங்களை விட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு பாதை பெரும்பாலும் கடல் பகுதியாக இருந்தாலும், வடக்கு நோக்கி நகரும் போது தரைப் பகுதிகளையும் ஊடறுத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளது.
மேலும் குறைந்த வேகத்தில் நகர்வதால் எதிர்வரும் 8, 9, 10ஆம் திகதிகளில் கிழக்கு மாகாணம் பாரிய மழைவீழ்ச்சியை எதிர்கொள்ளக்கூடும் என அவர் தெரிவித்தார்.
குறிப்பாக 9 மற்றும் 10ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும், இதன் தாக்கம் டிட்வா புயலால் தென்பகுதி எதிர்கொண்ட பேரழிவுகளை விட அதிகமாக இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை கருத்தில் கொண்டு துறைசார் அதிகாரிகள் துரிதமாக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர், பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு எச்சரிக்கையை தீவிரமாகக் கருத்தில் கொண்டு தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினார்.


