யாழ்ப்பாணம் தாவடி வீதியில் அரசியல் கட்சி அலுவலகத்திற்கு தீவைப்பு

யாழ்ப்பாணம் தாவடி வீதியில் அரசியல் கட்சி அலுவலகத்திற்கு தீவைப்பு

யாழ்ப்பாணம் தாவடி வீதியில் அமைந்துள்ள சர்வசன அதிகாரம் கட்சியின் அலுவலகத்திற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் தெரிவிப்பதாவது, 238, K.K.S. வீதி, தாவடி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள தனது வீடும் அலுவலகமும் உள்ள கட்டிடத்திற்கு, திட்டமிட்ட முறையில் தீ வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (13) இரவு சுமார் 11.40 மணி முதல் 11.50 மணி வரை இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னை மௌனமாக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் கொலை மிரட்டல் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அருண் குற்றம்சாட்டியுள்ளார். இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான நேரடி தாக்குதலாகவே இதை பார்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதங்களுக்கும், வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் தாம் ஒருபோதும் அடிபணியமாட்டோம் எனத் தெரிவித்த அவர், அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் மூலம் தனது குரலை அடக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.

“எனது கருத்தே நான். எனது கருத்துச் சுதந்திரம் என் உயிரைவிடப் பெறுமதியானது” எனக் கூறியுள்ள அவர், தன்னுடைய கருத்துச் சுதந்திரத்திற்காக மட்டுமல்ல, இந்த நாட்டின் கடைசி குடிமகனின் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் மூலம் தன்னை மௌனமாக்க முடியும் என நினைக்கும் சகல வன்முறையாளர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் அது ஒருபோதும் சாத்தியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உடனடி, நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )