அன்று நாம் பாடசாலைகளுக்கு Smart Board களை வழங்கிய சமயங்களில் எம்மை கிண்டல் செய்தவர்கள் இப்போது கல்வியில் ஆபாசத்தை புகுத்தி வருகின்றனர்

அன்று நாம் பாடசாலைகளுக்கு Smart Board களை வழங்கிய சமயங்களில் எம்மை கிண்டல் செய்தவர்கள் இப்போது கல்வியில் ஆபாசத்தை புகுத்தி வருகின்றனர்

நமது நாடு தொடர்ச்சியாக நான்கு துயர் நிறைந்த சம்பவங்களைச் சந்தித்துள்ள நேரத்தில், நாடும் நாட்டு மக்களும் பல்வேறு சவால்களைச் சந்தித்து அவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாடாக நாம் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், நாம் சரியானதையே செய்ய வேண்டும்.

தங்கள் பிள்ளைகளுக்கு உரிய பாதுகாப்பான வழிமுறைகளைக் காட்டிக் கொடுப்பதும், அவர்களுக்கு சரியான பராமரிப்பு, வழிகாட்டுதல் ஆகியவற்றை வழங்குவதும், நல்ல ஒழுக்கம் மற்றும் நாகரிக நடத்தையுடன் சிறந்த குடிமக்களாக அவர்களை உருவாக்குவதும் ஒவ்வொரு பெற்றோரின் விருப்பமும் அவாவும் ஆகும்.

நாடு இன்று செல்லும் திசையை நோக்கும் போது, ​​ஒழுக்கமும், நாகரிகமும், படித்த மற்றும் புத்திசாலித்தனமான பிள்ளைகள் தலைமுறையை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணி உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொரகல ஸ்ரீ சுதர்மாராம புராண விகாரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

நல்லொழுக்கமுள்ள, விழுமியம் மிக்க சமூகத்தை உருவாக்கவும், உலகை வெல்லக்கூடிய பிள்ளைகள் தலைமுறையை உருவாக்கவும் தேவையான கல்வி முறையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, காணப்படும் கல்விமுறையில் பொருத்தமற்ற விடயங்களைப் புகுத்தி, திரிபுடுத்துவதை விட்டு விட்டு, நல்ல விடயங்களை சேர்ப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும்.

சரியான விடயத்தின் பால் தான் பிள்ளைகளை வழிகாட்ட வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை போலவே சமூகத்திற்கும் நாட்டிற்கும் அதன் தாக்கம் இருக்கும். ஆகவே நல்லனவற்றின் மீது பிள்ளைகளை வழிபடுத்துவது நாமனைவரினதும் பொறுப்பாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த கல்விச் சீர்திருத்தங்களில், கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம், கலை, பொறியியல், மருத்துவம், ரோபாட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுடன் ஆங்கிலம் உள்ளிட்ட சர்வதேச மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளித்து, வரலாற்றையும் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை முன்னெடுத்து வந்த சமயங்களில், பணத்திற்காக வெறுப்பை விதைப்பவர்களை முன்னுறுத்தி இந்த திட்டத்தை விமர்சித்தனர். அன்று நாம் பாடசாலைகளுக்கு Smart Board களை வழங்கிய சமயங்களில் எம்மை கிண்டல் செய்தவர்கள் இப்போது கல்வியில் ஆபாசத்தை புகுத்துயுள்ளனர்.

ஸ்மார்ட் வகுப்பறைத் திட்டத்தை வைத்து எம்மீது சேறு பூசியவர்கள் இன்று எமது கல்வி முறையில் ஆபாசமான வலைத்தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அன்று நாம் இலவச கல்விக்கு எம்மாலான மட்டத்தில் பெறுமானங்களைச் சேர்த்து வந்த சமயங்களில் எம்மைப் பார்த்து கிண்டல் அடித்தவர்கள் இன்று கல்வியில் ஆபாசமான விடயங்களைச் சேர்க்கிறார்கள்.

முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்திற்கு இனியேனும் மக்கள் ஏமாந்து விடக் கூடாது.

மக்கள் 2019 இலும் போலவே 2024 இலும் ஏமாந்து போனர். அரசியலை விடுத்து, பிள்ளைகள் குறித்து சிந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )