
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு ; 5 பேர் கைது
ஜிந்துபிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவரை கொலை செய்ததுடன், இரண்டு குழந்தைகளுக்கு காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) மற்றும் நேற்று முன்தினம் (18) கரையோர பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஜிந்துபிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இக்கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக்குற்றச் சம்பவத்திற்கு உதவியும் உடந்தையாகவும் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரிடம் இருந்து 4 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று ஆண் சந்தேக நபர்கள் மற்றும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 49 வயதுடையவர் என்பதுடன், ஏனைய சந்தேக நபர்கள் 18, 33, 40 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும், அனைவரும் கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவரை 23ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றைய சந்தேக நபர்கள் மற்றும் பெண் சந்தேக நபர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரையோர பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

