
களனியில் 32 கிலோ கேரள கஞ்சா மீட்பு
களனி – அங்கொடை வீதிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, சுமார் 32 கிலோ கிராம் கேரள கஞ்சா களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இருந்த மூன்று பொதிகளில் இந்த கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டதாகவும், வாகனத்தில் இருந்த சந்தேக நபர்கள் அவற்றை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், களனி பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் அசங்கவின் மேற்பார்வையிலும், பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். ரத்நாயக்கவின் அறிவுறுத்தலின் பேரிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

