
புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
புதிய கல்விச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, நுவரெலியா பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (20) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
நுவரெலியா பிரதேசத்தில் 2026 ஆம் ஆண்டில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது, காலம் தாழ்த்தாமல் சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாடக் கற்றல் தொகுதியைத் தவிர, ஏனைய பாடங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்கி கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், எதிர்வரும் நாட்களில் இதற்கான உரிய தீர்வு கிடைக்காவிட்டால், பாடசாலை மாணவர்களையும் வீதிக்கு அழைத்து வந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

