பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகள் காட்டிய  நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காணொளிகள் காட்டிய நபர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மாணவிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி கற்கும் 11 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக மாணவர்கள் வழங்கிய புகார்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை இன்று (21) நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர், நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களுக்காக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு திட்டமொன்றை முன்னெடுத்து வரும் நிலையில், அந்தத் திட்டத்தின் போதே இவ்வாறான புகார்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்த 06 மாணவிகள், தடயவியல் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )