விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

உலகளவில் பேசப்படும் பிரபல விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 27 ஆண்டுகள் நாசாவில் பணியாற்றிய பின்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் தந்தை அமெரிக்க விஞ்ஞானியான தீபக் பாண்டியா குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியைச் சேர்ந்த போனி என்பவரின் மூன்றாவது மகளாக 1965 ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.

சிறுவயதிலேயே விண்ணில் பறக்க வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொண்ட சுனிதா, அமெரிக்காவின் நீதம் பகுதியில் பள்ளிக்கல்வியை முடித்ததுடன், புளோரிடாவில் பொறியியல் பட்டம் பெற்றார்.

பின்னர் அமெரிக்க கடற்படையில் விமானியாக பணியாற்றிய அவர், 1998 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் இணைந்தார்.

2006 ஆம் ஆண்டு முதன்முறையாக விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட சுனிதா வில்லியம்ஸ், தனது சாதனைகளின் மூலம் உலக கவனத்தை ஈர்த்தார். அவரது விண்வெளி பயணங்கள் மற்றும் சாதனைகள் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றன.

கடந்த ஆண்டு 59 வயதான நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் (62) உள்ளிட்ட குழுவினருடன் நாசாவின் சார்பில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போயிங் “ஸ்டார்லைனர்” விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்.

8 நாட்கள் தங்கியிருந்து பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்த போதும், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 286 நாட்கள் (சுமார் 9 மாதங்கள்) விண்வெளியில் தங்கியிருந்த பின்னர், இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் திகதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பாதுகாப்பாக பூமிக்கு மீட்கப்பட்டனர்.

இதுவரை மூன்று முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ள சுனிதா வில்லியம்ஸ், மொத்தமாக 608 நாட்கள் விண்வெளியில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது நீண்டகால சேவையும் சாதனைகளும் உலக விண்வெளி வரலாற்றில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )