பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பாராளுமன்றம் பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் கூடும்

பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் அண்மையில் (23) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

இதற்கமைய, பெப்ரவரி 3, 5 மற்றும் 6ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றம் கூடும் மூன்று தினங்களும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டத்தின் கீழ் 2396/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதனையடுத்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்பின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 5ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் ஏற்கனவே முதலாவது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை நிலையான சொத்து உயர்தொழிலர்கள் உரிமமளித்தல் சட்டமூலம் இரண்டாவது மதிப்பிட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மற்றும் கப்பற்றொழில் முகவர்களுக்கு, சரக்கு அனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தப்படாப் பொதுக் காவுநர்க்கு மற்றும் கொள்கலம் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் (திருத்தச்) சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்கள் அரசியலமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்படாவிடின் இவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதமும் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை, மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கீழ் காணப்படும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

1. ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி – தேசிய விளையாட்டு அணியொன்றைப் பிரதிநிதித்துவுப்படுத்துகின்ற அல்லது தேசிய மட்ட சாதனையைப் படைத்துள்ள விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறைக்குரிய ஏதேனும் பட்டப் பாடநெறியைப் பயில்வதற்கு வாய்பினை வழங்குதல்.

2. சமிந்த விஜேசிறி – இலங்கை வெளிநாட்டு சேவைக்காக நியமனங்கள் வழங்கப்படுவதை முறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.

3. ரவி கருணாநாயக்க – இலங்கையிலுள்ள விளையாட்டு அமைப்புக்களை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுபடச் செய்தல்.

4. லால் பிரேமநாத் – அடிமட்டத்தில் செயற்படும் நாட்டிலுள்ள சகல உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பிலும் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை தணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.

5. ரோஹண பண்டார – பேராசிரியர் பதவிகள் மற்றும் கலாநிதி பட்டங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.

6. நலின் பண்டார ஜயமஹ – பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல்.

7. ரவீந்திர பண்டார – பைனஸ் செய்கையால் நீர் மூலங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுப்பதற்கான முறையியலொன்றைத் தயாரித்தல்.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்புப் பேரவையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்அல்லாத உறுப்பினர்கள் மூவரின் பதவிக்காலம் முடிவடைந்திருப்பதால், அரசியலமைப்பின் 41 அ (4) மற்றும் (5) யாப்புகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரின் பெயர்களடங்கிய பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சபையின் விசேட அனுமதியுடன் இன்றையதினமே (23) பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )