
அமெரிக்காவில் பனிப்புயல் ; 15 மாகாணங்களில் அவசரநிலை
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், இன்றும் நாளையும் பனிப்புயல் தாக்கும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் இந்த பனிப்புயல், நியூ மெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை பரவுவதுடன், மத்திய அட் லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களையும் கடுமையாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்கத் தொடங்கியுள்ளதுடன், பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் பொதுவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பரவலான மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும், மரங்களில் பனி உறைந்ததால் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் மின்வெட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகள் பல இடங்களில் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளன.
பனிப்புயல் காரணமாக சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை உள்ள பகுதிகள் குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
மேலும், பனிப்புயல் தாக்கத்தின் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓக்லஹோமா நகரில் அமைந்துள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அதிகளவிலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த பனிப்புயல் அமெரிக்காவை முற்றாக முடக்கி வைத்துள்ள நிலையில், மக்கள் தேவையற்ற வெளியேற்றங்களை தவிர்த்து வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

