சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தற்காலிகமாக நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் தற்காலிகமாக நீடிப்பு

2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல்) கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், உரிய காலத்திற்குள் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அந்தக் காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விநியோகம் மற்றும் புதுப்பித்தல் தொடர்பான கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, சேவைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வீதிப் பாதுகாப்பிற்கோ அல்லது வீதியைப் பயன்படுத்துவோருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், 2025 நவம்பர் 25 முதல் 2025 டிசம்பர் 24 வரை செல்லுபடியாகும் காலம் முடிவடையவிருந்த சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, அவை காலாவதியாகும் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2025 டிசம்பர் 17 ஆம் திகதியிடப்பட்ட 2467/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த கட்டளை வெளியிடப்பட்டுள்ளது.

(203 ஆம் அதிகாரச் சட்டமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, இந்தக் கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )