
AI குரல் மோசடி தொடர்பில் வெளியான எச்சரிக்கை
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, அதாவது AI-யை பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோசடிக்காரர்கள், போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் குரல்களை பதிவு செய்கின்றனர்.
பின்னர் அந்த குரல் பதிவுகளை அடிப்படையாக கொண்டு, AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதே நபரின் குரலைப் போல செயற்கை குரல் உருவாக்கப்படுகிறது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட செயற்கை குரலை பயன்படுத்தி, வங்கிகள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது தானியங்கி பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றி, பாதிக்கப்பட்ட நபராகவே நடித்து பணமோசடி செய்யப்படுகின்றது.
இந்த வகை மோசடிகளில் பெரும்பாலும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோசடி சம்பவங்கள் தொடர்பாக தற்போது பல நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, எதிர்பாராத தொலைபேசி அழைப்புகள், போலி கருத்துக்கணிப்புகள் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் கேட்கும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன.
மேலும், தொலைபேசி வழியாக எந்தவிதமான ரகசிய தகவல்களையும் பகிர வேண்டாம் என்றும், சந்தேகத்திற்குரிய கோரிக்கைகள் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை நேரடியாக தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

