
சபரிமலை நடை நாளை மாலை திறப்பு
மண்டல பூஜை மற்றும் பந்தள அரச வம்ச பிரதிநிதிகளின் தரிசனத்திற்குப் பின்னர் கடந்த மாதம் 20ஆம் திகதி சபரிமலை கோவில் நடை மூடப்பட்டது.
இந்நிலையில், கும்ப மாத (மாசி) வழிபாட்டிற்காக கோவில் நடை நாளை (12) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி நடை திறப்பார். யோக நித்திரையில் உள்ள அய்யப்பனுக்கு தீபம் காட்டி துயிலெழுப்பியதும், கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.
நடை திறக்கப்படும் நாளில் எந்தவித பூஜையும் நடைபெறாது. தவக்கோலத்தில் இருக்கும் அய்யப்பன் மீது பூசப்பட்டுள்ள விபூதி அகற்றப்பட்டு, அது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகள் பிப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறும்.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி மாதாந்திர பூஜைகளை நடத்தவுள்ளார்.
தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியுள்ளது. sabarimalaonline.org.in இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். மாதாந்திர பூஜை காலம் என்பதால் கூட்டம் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவிக்கையில், “மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, இவ்வாறான மாதாந்திர பூஜை தரிசனங்களை பக்தர்கள் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தனர்.

