தலங்கம சட்டத்தரணி துப்பாக்கிச்சூட்டுகொலையாளிகளைக் கண்டுபிடிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

தலங்கம சட்டத்தரணி துப்பாக்கிச்சூட்டுகொலையாளிகளைக் கண்டுபிடிக்க 10 விசேட பொலிஸ் குழுக்கள் நியமனம்

தலங்கம, அக்குரெகொட பகுதியில் தம்பதியினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் 10 விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

அக்குரெகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து
: காரில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி தமது வாகனத்திற்குள் இருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சட்டத்தரணி சட்டத்தரணி புத்திக மல்லவாராச்சி மற்றும் அவரது 41 வயதுடைய மனைவி இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர் .

கொல்லப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவாராச்சி, பிரதானமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து, சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட சட்டத்தரணி மல்லவாராச்சி, கடந்த காலங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல நபர்களுக்காக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

எனவே, அவரது தொழில்முறைச் செயல்பாடுகள் இந்தத் துப்பாக்கிச்சூட்டுடன் ஏதேனும் தொடர்பைக் கொண்டுள்ளனவா என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

எனினும், விசாரணைகள் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே உள்ளதால் இறுதி முடிவுகள் எதற்கும் வரவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தக் கொலையை வன்மையாகக் கண்டித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட பாரிய அச்சுறுத்தல் என BASL விவரித்துள்ளது.

இந்த விடயத்தில் துரிதமான மற்றும் விரிவான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளைத் தாமதமின்றி சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொலிஸாரைக் கேட்டுக்கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சட்ட அமலாக்கப் பிரிவினர் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )