
மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட அறுவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட அறுவருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றிற்குப் போலியான உறுதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்குத் தொடர்பாக மேல் நீதிமன்றப் பிணையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் இருவரும் ஏனைய நான்கு சந்தேகநபர்களும் இன்று (பெப்ரவரி 27) நீதிமன்றத்தில் முன்னிலையானபோது, அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
அமைச்சர்களுக்கு மேலதிகமாக சரத் எதிரிசிங்க, அஜித் மில்ரோய், ஜயந்த கப்ரில் மற்றும் நவீன் வீரகோன் ஆகியோருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது.
பிரதிவாதிகள் அனைவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்ட கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, வழக்கினை மீண்டும் மார்ச் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

