
போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு 7 நாட்கள் விளக்கமறியல்
தென்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடி படகு ஒன்றிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட
10 சந்தேக நபர்களையும் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆழ்கடல் பகுதியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளுடன் 5 சந்தேக நபர்கள் பயணித்த ஒரு மீன்பிடி படகையும், அதனுடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேக நபர்கள் பயணித்த மற்றொரு மீன்பிடி படகையும் கடற்படையினர் கைப்பற்றி, கடந்த 12-ம் திகதி டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் போலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் இரணவில, மகாவெவ, மெல்சிறிபுர, வென்னப்புவ, நீர்கொழும்பு, நாக்குளுகமுவ, தங்கல்ல , நெட்டோல்பிட்டிய மற்றும் காந்தர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்:
ஹெரோயின்: 176 கிலோ 568 கிராம்.
ஐஸ் (Crystal Meth): 478 கிலோ 326 கிராம்.
துப்பாக்கிகள்: 8 பிஸ்டல்கள், 2 T-56 ரக துப்பாக்கிகள்,
16mm ரக துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
15 பிஸ்டல் மேகசின்கள் மற்றும் 4mm -16 மேகசின்களும் கைப்பற்றப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சுமார் 654 கிலோ கிராம் போதைப்பொருளின் சந்தை மதிப்பு 10 பில்லியன் ரூபாய்க்கும் (1,000 கோடி ரூபாய்) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்தல், கடத்துதல் மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

