ஈரானின் எண்ணெய் வளங்கள் தாக்கப்பட்டால் மதித்திய கிழக்கிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் தாக்கப்படும்

ஈரானின் எண்ணெய் வளங்கள் தாக்கப்பட்டால் மதித்திய கிழக்கிலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் தாக்கப்படும்

ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலுக்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக, அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் பிராந்தியத்திலுள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் பிரதான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் (Kharg Island) உள்ள ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானிய ஆயுதப் படைகளின் கூட்டுப் போர் கட்டளையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.

கார்க் தீவு தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கப் படைகள் கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கின என்றும், எண்ணெய் ஏற்றுமதி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரானோ அல்லது வேறு தரப்பினரோ தாக்குதல் நடத்தினால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஈரான் தனது எண்ணெய் வளங்கள் தாக்கப்பட்டால், பதிலுக்கு வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளின் எண்ணெய் கிணறுகள் மற்றும் நிறுவனங்களைத் தாக்குவோம் என்று மிரட்டியுள்ளது.

தற்போது ராணுவ நிலைகளை மட்டுமே தாக்கியுள்ளதாகக் கூறிய , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அடுத்தகட்டமாக எண்ணெய் நிலையங்களைத் தாக்க வாய்ப்புள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை வழியாகவே உலகின் பெரும்பகுதி எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.

இங்கு மோதல் தீவிரமடைந்தால் உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )