ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் டிரம்ப் தெரிவிப்பு                                          பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ஈரான் மறுப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் டிரம்ப் தெரிவிப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை ஈரான் மறுப்பு

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே,வார இறுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, 15 உடன்பாட்டுப் புள்ளிகள் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீண்டும் திறக்க ஈரான் சம்மதிக்காவிட்டால் தாக்குதல் நடத்தப்படும் என முன்னர் எச்சரித்திருந்த ட்ரம்ப், தற்போது ஐந்து நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

ஆனால், வாஷிங்டனுடன் நேரடிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என ஈரானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பிற நாடுகள் மூலமே செய்திகள் பரிமாறப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை அமெரிக்க ஜானாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் வெளியிட்ட “ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை” குறித்த கூற்றுக்களை ஈரானிய வெளியுறவு அமைச்சு உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளதாக சில சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே அத்தகைய எந்தவொரு உரையாடலும் நடைபெறவில்லை என ஈரான் தெரிவித்துள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே 15 உடன்பாட்டுப் புள்ளிகள் எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கூறியதை “வெறும் கட்டுக்கதை” என ஈரான் கூறியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது..

உலகளாவிய எரிசக்தி விலையைக் கட்டுப்படுத்தவும், புதிய இராணுவ வியூகங்களை வகுப்பதற்குமான கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்ளவுமே ட்ரம்ப் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்புகிறார் என தெஹ்ரான் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்குத் தான் காரணமல்ல என்றும், நிலைமையைச் சீர்செய்யும் கோரிக்கைகளை வாஷிங்டன் பக்கமே திருப்ப வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

ஈரானிய எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்த போதிலும், ஈரான் தனது எச்சரிக்கையில் உறுதியாக உள்ளது.

இதேவேளை , ஈரான் ஆட்சி முழுமையாக வீழ்த்தப்படும் வரை போர் நிறுத்தப்படக் கூடாது என்று இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன் (Avigdor Liberman) வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளதாக
கூறியதை தொடர்ந்தே இஸ்ரேல் எதிர்க்கட்சித் தலைவர் லிபர்மேன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரான் முன்னெடுக்கும் ட்ரோன் தாக்குதல்கள் இஸ்ரேல் மட்டுமன்றி, அமெரிக்கத் தளங்கள் அமைந்துள்ள ஜோர்டான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளையும் பாதித்துள்ளன.

இதனால் உலகளாவிய சந்தை மற்றும் விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முடிவுக்கு வந்தாலும், உலகின் 20% எரிபொருள் கடந்து செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியின் நிலைமை பழைய நிலைக்குத் திரும்பப்போவதில்லை என ஈரான் சூசகமாகத் தெரிவித்துள்ளதாகவும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் பேச்சுவார்த்தை குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 114 டாலரிலிருந்து 99 டாலராக (7% சரிவு) குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )