இலங்கையின் அரச சேவை சீர்திருத்தங்களுக்கான பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவு

இலங்கையின் அரச சேவை சீர்திருத்தங்களுக்கான பயிற்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவு

நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந் அபயரத்ன மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) ஆகியோருக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று(24) நாரஹேன்பிட்டியில் உள்ள “நில மெதுர” அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்தும் வகையில், பல்வேறு நெருக்கடி காலங்களில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பை அமைச்சர் பாராட்டினார். அத்துடன் நாட்டின் பல அபிவிருத்தித் துறைகளின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் தற்கால அரச சேவை கட்டமைப்பில் உள்ள பழைய முறைகளுக்குப் பதிலாக, அவை நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் சீரமைக்கப்பட வேண்டும் என்று உயர்ஸ்தானிகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதற்கான மனிதவளப் பயிற்சி மற்றும் அபிவிருத்தி (Training and Development) நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த பயிற்சித் திட்டங்கள் இலங்கையின் தனித்துவம் மற்றும் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

உலகளாவிய காலநிலை மாற்றத்தினால் இலங்கை எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையர்களின் வலுவான மீண்டுவரும் திறன் (Resilience) மற்றும் நெகிழ்வுத்தன்மை குறித்து உயர்ஸ்தானிகர் பாராட்டு தெரிவித்தார். குறிப்பாக, தற்போதைய ஜனாதிபதியின் நெருக்கடி முகாமைத்துவத் திறமையினால் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருவது குறித்தும், ஊழல் எதிர்ப்பு அரச கொள்கையின் கீழ் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளின் வெற்றி குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உள்ள சட்ட ரீதியான தடைகளை நீக்கி, கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இதன்போது விளக்கமளித்தார்.

புத்தளம் மாவட்டம் மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து உயர்ஸ்தானிகர் இதன்போது வினவியதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் என பல்லின மக்கள் வாழும் மாவட்டமாக அனைத்து இனத்தவர்களும் மிகவும் அமைதியாகவும் ஒத்துழைப்புடனும் வாழ்வது முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரி என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புத்தளம் மாவட்டத்தின் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி (Renewable Energy) தொடர்பான செயற்பாடுகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

புத்தளம் மாவட்டம் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி (Wind & Solar Farms) திட்டங்களுக்கு மிகவும் பொருத்தமான பிராந்தியமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கோ அல்லது சுற்றாடலுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் அந்தத் திட்டங்களைச் செயற்படுத்துவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக கடலோர காற்று மின் உற்பத்தி (Offshore Wind) எனும் எண்ணக்கரு குறித்து உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியதுடன், அதன் முக்கியத்துவம் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விஜயம் செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் ஆலோசகர் இன்சாப் மாக்கார் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )