
விலை அதிகரிப்பு குறித்து ஆராய பேக்கரி உரிமையாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு அழைப்பு
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் இந்நாட்டின் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இன்று (26) கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள நிலைமைகளின் கீழ், பேக்கரி உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த விலை அதிகரிப்புக்கு காரணமான விடயங்கள் குறித்து அவர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
பேக்கரி உணவு உற்பத்திக்கான அடுப்புகளுக்கு டீசல் பயன்படுத்தப்படுவதால், எரிபொருள் விலை அதிகரிப்பு தமது உற்பத்திச் செலவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பேக்கரி உற்பத்திகளுக்குத் தேவையான பிரதான மூலப்பொருளான கோதுமை மாவின் விலையை எதிர்வரும் புத்தாண்டு முடியும் வரை அதிகரிக்கப்போவதில்லை என கோதுமை மா நிறுவனங்கள் கடந்த வாரம் தெரிவித்திருந்தன.
இதனை நினைவுபடுத்திய வர்த்தக அமைச்சர், புத்தாண்டு காலத்தின் பின்னர் கோதுமை மாவின் விலை ஏதேனும் ஒரு வகையில் அதிகரிக்கப்பட்டால், மீண்டும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரித்தாலும் பேக்கரி உற்பத்திகளின் விலையை அதிகரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தது.
பாம் எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் மாஜரின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்பதால், தமது உற்பத்திகளில் வெண்ணெய் (Butter) பயன்பாட்டை ஊக்குவிக்க தற்போதுள்ள தடைகளை நீக்கித் தருமாறு பேக்கரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து அவதானம் செலுத்திய அமைச்சர், பாம் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விலை பேக்கரி உற்பத்திகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், வெண்ணெய்க்கான இறக்குமதி வரி திருத்தம் குறித்து பரிசீலிப்பதற்கு அவர்களது கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

