
ஓமானில் கைதான ‘மிதிகம சூட்டி’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் முக்கிய செயற்பாட்டாளருமான ராஜபக்ச பத்திரணலாகே பிரபாத் மதுசங்க, அல்லது ‘மிதிகம சூட்டி’ (38 வயது), இன்று (30) அதிகாலை ஓமானில் இருந்து விசேட பொலிஸ் குழுவினரால் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலைச் சம்பவங்கள்,கொள்ளை,சட்டவிரோத துப்பாக்கி பயன்பாடு,போதைப்பொருள் கடத்தல்,உள்ளிட்ட இலங்கை நீதிமன்றங்களில் பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
இவரைக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்புப் பிரிவினரால் சர்வதேச ‘சிவப்பு அறிவித்தல்’ (Red Notice) விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஓமானில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸ் குழுவினர் ஓமானின் மஸ்கட் நகருக்குச் சென்று, இன்று அதிகாலை 04:27 மணிக்கு சலாம் எயார் (SalamAir) OV-437 விமானம் மூலம் மிதிகம சூட்டியை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
கட்டுநாயக்கவில் அவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) தலைமையகத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

