
ஈரானின் உயர்மட்டத் தலைவரிடமிருந்து ஈரானுக்குநன்றிகூறும் கடிதம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ,ஈரானுக்கு எதிராக ஆரம்பித்த போரின்போது, ஈராக் செயற்பட்ட விதம் குறித்து ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் மொஜ்தபா காமேனி, ஈராக் மதகுருமார்களுக்கும் மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
ஈராக் இஸ்லாமிய உயர் சபையின் சபாநாயகருக்கும், ஈராக் நாட்டிற்கான ஈரானிய தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, காமேனி அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று ஈராக் அதிகாரிடம் கையளிக்கப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக மார்ச் மாதம் தொடக்கத்தில் மொஜ்தபா காமேனி பதவியேற்றதன் பின்னர், அவர் அனுப்பியதாகக் கூறப்படும் பல கடிதச் செய்திகள் தற்போது பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், அவர் பதவியேற்றது முதல் இதுவரை பகிரங்கமாகவோ அல்லது அரச தொலைக்காட்சியிலோ தோன்றவில்லை.
இதன் காரணமாக, மொஜ்தபா காமேனி மரணமடைந்திருக்கலாம் அல்லது மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், காமேனி பொதுவெளியில் தோன்றாதது பாதுகாப்பு காரணங்களுக்காகவே என ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான காலஞ்சென்ற ஆயதுல்லா அலி காமேனி, கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் முதல் நாளிலேயே உயிரிழந்த போதிலும், அவரது உடல் இதுவரை அடக்கம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

