
எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் நீர் வெட்டு அமுலில்
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நீர் வெட்டு இன்றும் (04) தொடர்கிறது.
நுகர்வோரின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, திட்டமிடப்பட்ட 24 மணிநேர நீர் வெட்டை 18 மணிநேரமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (03) மாலை அறிவித்தது.
இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி வரை கால அட்டவணைக்கு அமைவாக அந்தப் பகுதிகளில் நீர் விநியோகம் அவ்வப்போது மட்டுப்படுத்தப்படும்.
பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த மற்றும் பன்னிபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நேற்று (03) இரவு 8 மணி முதல் இன்று (04) பிற்பகல் 2 மணி வரை 18 மணிநேர நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
இன்று (04) இரவு 8 மணி முதல் நாளை (ஏப்ரல் 05) பிற்பகல் 2 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அறிவிப்பின்படி, பாதுக்க, ஹோமாகம மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு நீர் வெட்டு மேற்கொள்ளப்படும்.
பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை (3 மணித்தியாலங்கள்) நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
எவ்வாறாயினும், நீர் வெட்டு இல்லாத நாட்களில் தொடர்ச்சியான நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

