
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து, ரயில் சேவைகள் ஆரம்பம்
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதியை உறுதிப்படுத்தும் வகையில் விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு சுமார் 1500 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன், பதுளை, கண்டி, பண்டாரவளை, அனுராதபுரம், திருகோணமலை, யாழ்ப்பாணம், சிலாபம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளை மையப்படுத்தி அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனுடன், ரயில்வே திணைக்களமும் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் விசேட புத்தாண்டு ரயில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறிப்பாக, புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான வடக்கு வழித்தட ரயில் சேவைகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எதிர்வரும் 9ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

