
அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து250 பேர் காணாமல் போயுள்ளனர்
அந்தமான் கடலில் ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 250 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை, பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு மற்றும் படகில் அளவுக்கு அதிகமான நபர்கள் ஏறியது ஆகிய காரணங்களால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்தப் படகு வங்கதேசத்தின் டெக்னாஃப் பகுதியிலிருந்து புறப்பட்டு மலேசியாவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
படகில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 250 பேர் இருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மற்றும் குடியேற்ற முகமைகள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் நிலவும் அடக்குமுறை மற்றும் வங்கதேசத்தில் உள்ள நெரிசலான அகதி முகாம்களில் இருந்து தப்பிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மலேசியா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
மியான்மர் ராணுவத்தின் தாக்குதலால் சுமார் 7,30,000 ரோஹிங்கியா மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். இதில் நடந்த கொலைகள் மற்றும் வன்முறைகளை ஐநா “இனப்படுகொலை” என்று வகைப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து, அகதிகளின் தீர்க்கப்படாத பிரச்சனைகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டுவதாக ஐநா கூறியுள்ளது.
சர்வதேச சமூகம் முன்வந்து, வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள வங்கதேச சமூகத்தினருக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மியான்மர் அரசு இந்த “இனப்படுகொலை” குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.
ஐநா உண்மைக் கண்டறியும் குழுவின் அறிக்கைகள் நம்பகத்தன்மை அற்றவை என்று மியான்மர் தரப்பு கூறிவருகிறது.

