எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி – அமைச்சின் செயலாளர் இருவரும் பதவி விலகினர்                                          ஆணைக்குழுவின் சுதந்திரமான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி – அமைச்சின் செயலாளர் இருவரும் பதவி விலகினர் ஆணைக்குழுவின் சுதந்திரமான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

நிலக்கரி இறக்குமதி மற்றும் அது சார்ந்த மின்சார உற்பத்தியில் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இன்று விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் பக்கச்சார்பற்ற மற்றும் சுதந்திரமான விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே அமைச்சரும் செயலாளரும் தமது பதவிகளைத் துறந்துள்ளனர்.

நிலக்கரி விநியோகம் தொடர்பில் விசேட விசாரணை ஆணைக்குழுவை நியமித்தமை மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி செயலாளர் ஊடாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்தமை போன்ற ஜனாதிபதியின் ஊழலுக்கு எதிரான துணிச்சலான முடிவுகளைத் தான் பாராட்டுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகள் மிகவும் சுதந்திரமாகவும், எவ்வித தலையீடுகளுமின்றியும் அமைய வேண்டும் என தான் நம்புவதாகவும், அந்த விசாரணைகள் முடியும் வரை தான் பதவியில் நீடிப்பது அதற்குத் தடையாக அமையலாம் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாமல் இருப்பதையும், விசாரணைகளின் சுதந்திரத் தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் தனது செயலாளர் பதவியிலிருந்து விலகுவது பொருத்தமானது என தான் நம்புவதாகப் பேராசிரியர் உதயங்க ஹேமபால தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )