
தமிழக சட்ட மன்ற தேர்தல் இம்முறை சாதனை வாக்குப்பதிவு
இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது என இந்திய ஊடகங்கள் அறிவித்துள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17வது பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை (23) காலை 7 மணியளவில் ஆரம்பமானது. விறுவிறுப்பாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டபோதிலும் மாலை 6 மணிக்குள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் சென்றுவிட்ட அனைத்து வாக்காளர்களும் வரிசையில் நிற்கின்ற நிலையில், அவர்கள், இரவு 8, 9 மணிக்குப் பின்னரும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
காலையிலிருந்து மும்முரமாக இடம்பெற்று வரும் தேர்தல் வாக்குப்பதிவுக்காக அறிவிக்கப்பட்டிருந்த நேரம் நிறைவடைந்துவிட்டபோதிலும் முன்னதாக வரிசையில் வந்து நின்று காத்திருக்கும் வாக்காளர்களுக்கு மட்டும் வாக்குகளை பதிவிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5.00 மணி நிலவரப்படி 82.24% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக கரூரில் 89.32% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 73.44% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தலைநகர் சென்னையில் மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 72.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இதன்படி தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4 கோடியே 71 லட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடத்தில் மாலை 5.00 மணியளவில் 4 கோடி பேர் வாக்களித்திருந்த நிலையில் இம்முறை அதனை விட 70 லட்சம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
75,000 இற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

